பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
சுற்றுலா தளங்கள்
வள்ளுவர் கோட்டம்
வள்ளுவர் கோட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில அமைந்திருக்கிறது.

"அணுவைத் துளைத்துஏழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்”

என்று ஒளவைப் பாட்டியால் சிறப்பாகப் போற்றப்பட்ட, உலகப் பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்குச் சிறப்புச் செய்யப்படவேண்டும் என்ற தமிழ்ச் சான்றோர்களின் நீண்டகாலக் கனவாக இருந்தது. அதை நனவாக்கும் வகையில், 18.9.1974 அன்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 15.4.1976 ஆம் ஆண்டு மேதகு ஆளுநர் திரு. கே.கே. ஷா அவர்கள் தலைமையில், மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் திரு.பக்ருதீன் அலி அகம்மது அவர்களால் இந்த வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.இப்போது இந்த வள்ளுவர் கோட்டத்தின் சிறப்புகளை நாம் ஒவ்வொன்றாக காணலாம்.

வள்ளூவர் கோட்டத்தின் தோரண வாயிலில் மிக அழகாக,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு'

என்ற ஐயன் வள்ளுவனின் முதல் குறள் பொறிக்கப்பட்டு நம்மை அழகாக வரவேற்கிறது.

அதனையடுத்து தலைவாயிலை அடையும் வரை உள்ள நடைபாதைக்கு இரண்டு பக்கத்திலும், கண்ணுக்கு குளிர்ச்சியாக, பச்சைப்பசேலேன்று போர்வை போர்த்தினார் போல், அழகாக ஒரு புல்வெளித் தோட்டம் அமைத்திருக்கிறார்கள்.

இப்போது நாம் தோரணவாயிலைக் கடந்தால் வள்ளூவர் கோட்டத்தின் நுழைவாயிலை அடையலாம். இங்கு வள்ளுவர் கோட்டத்திற்கு செல்லும்முன் மூன்று நிலைகள் இருக்கின்றது. கீழே இருப்பது அரங்க மண்டபம். அரங்க மண்டபத்தின் மேல்பகுதியை சுற்றியும் இருப்பது குறள் மணிமாடம். அதன்பிறகு அரங்கத்தின் மேல் பகுதியில் இருப்பது வேயா மாடம். அதனையடுத்து, இந்த மூன்று நிலைகளையும் இணைத்து நிற்பது பிரம்மாண்டமான தேர்.

அரங்க மண்டபத்திலும் தோரண வாயிலில் எழுதி இருந்ததைப் போன்றே, ஒரு திருக்குறள் எழுதியுள்ளதைப் பார்க்கலாம்.

'எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'

இந்த அரங்கத்தினுள் சுமார் நாலாயிரம் பேர் அமர்ந்து, இங்கு நடக்கின்ற நிகழ்ச்சிகளை எந்தவித தடையும் இல்லாம பார்க்கும் விதத்தில் இதைக் கட்டியிருக்கின்றார்கள். ஆனால், இதில் ஒரு முக்கியமான செய்தி என்னவெனில், இவ்வளவு பெரிய மண்டபத்தில தூண்களே கிடையாது என்பது தான்.

இதன் நீளம் எவ்வளவு தெரியுமா. 220 அடி. அதாவது 67 மீட்டர். அகலம் 100 அடி. அதாவது 30.5 மீட்டர். இந்த அரங்கத்தின் வெளிப்புறமாக இருக்கும் தாழ்வாரத்தின் அகலம் 20 அடி. அதாவது 6 மீட்டர். இவ்விடத்தில் ஒரு முக்கியமான செய்தி ஒன்றை நினைவு கொள்ளவேண்டும். அது என்னவெனில், நம் ஆசியா கண்டத்தில் இருக்கின்ற மிகப்பெரிய அரங்கங்களில் இதுவும் ஒன்று.

மேடையின். இரண்டு பக்கமும் இரண்டு ஓவியங்கள் உள்ளன. அதில் சங்க காலப் புலவர்கள் அதங்கோட்டாசான் மற்றும் தொல்காப்பியர். இவர்களின் ஓவியங்களைத் தான் அழகுற வரைந்திருக்கிறார்கள். மேடையின் நடுவில் பார்த்தால். எவ்வளவு அழகுற நம் ஐயன் திருவள்ளுவரின் ஓவியத்தை வரைந்திருப்பதை காணலாம்.

அரங்கத்தின் பின் பகுதிக்குச் சென்றால் வள்ளுவர் கோட்டத்துக்கே சிறப்பு சேர்க்கின்ற சிற்பத் தேரைக் காணலாம். இந்தத் தேரை இரண்டு யானைகள் இழுத்துக்கொண்டு போவது போல், மிக நுணுக்கமான வேலைப்பாடுகளோடு இதனை வடிவமைத்திருக்கிறார்கள். கம்பீரமாக நிற்கும் இந்த யானைகளின் உயரம் எவ்வளவு தெரியுமா. 7 அடி. உலகப் புகழ் பெற்ற அந்த திருவாரூர்த் தேரையே மாதிரியாக கொண்டு தேர் வடிக்கப் பட்டுள்ளது. இந்த தேர் தான் இந்த வள்ளுவர் கோட்டத்தின் மணிமுடி என்று சொன்னால், அது மிகையில்லை.

இதன் அடிப்பகுதி 25க்கு 25 அதாவது 7.5 மீட்டர் நீளம் 7.5 அகலம் கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இதன் உயரம் 128 அடி அதாவது 39 மீட்டர். தேரின் அடிபாகத்திலிருந்து மேல் பாகம் வரையிலும், 133 குறட்பாக்களுக்கும் பொருள் விளக்கம் அளிக்கும் அழகிய சிற்பங்களை உயிரோவியங்களாய்ச் செதுக்கியிருக்கார்கள்.

தேரின் வலப்புறமும், இடப்புறமும் நான்கு மிகப்பெரிய சக்கரங்களையும், நான்கு சிறிய சக்கரங்களையும் செதுக்கியிருக்கிறார்கள். பெரிய சக்கரங்கள் ஒவ்வொன்றும் 11.25 அடி அதாவது 3.43 மீட்டர் குறுக்களவும், 2.5 அடி அதாவது 0.76 மீட்டர் தடிமனும் கொண்டது.

இந்த தேரின் உச்சியில் தான் உலகப்பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய நம் ஐயன் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை அமைந்திருக்கும் கருவறை, நில மட்டத்திலிருந்து 30 அடி அதாவது 9 மீட்டர் உயரத்தில அமைந்திருக்கிறது. சிலை வைக்கப்பட்டிருக்கும் கருவறையை எண்கோண வடிவத்தில அமைத்திருக்கிறார்கள். இந்தக் கருவறையின் அகலம் 40 அடி அதாவது 12 மீட்டர். இதன் நுழைவாயிலில் அழகான தூண்களையும் அமைத்திருக்கிறார்கள்.

அடுத்ததாக நாம் காணவேண்டிய முக்கியமான ஒன்று குறள் மணிமாடம். இங்கு திருக்குறளில் இருக்கும் 1330 குறள்களையும், கற்பலகைகளில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். மிக அழகாக ஒரு புத்தகத்தை விரித்து வைத்தாற்போல் அமைக்கப் பட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், அறத்துப்பாலில் வரும் குறள்கள் அனைத்தும், கருப்புநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பாலில் வருகின்ற அனைத்து குறள்களும், வெள்ளை நிறப் பளிங்குக் கற்களிலும் , காமத்துப் பாலில் வருகின்ற குறள்கள் அனைத்தும் செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டிருப்பது தான். இதுமட்டுமில்லாமல் குறள்களின் கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் பார்வைக்கு வைத்திருப்பதையும் பார்க்கலாம்.

அடுத்ததாக காணவேண்டியது வேயா மாடம். இந்த மாடத்தின் முனையில தான் சிற்பத்தேரின் கருவறை அமைந்திருக்கிறது. இந்த கருவறைக்குள் தான் திருக்குறளின் முப்பாலைக் குறிக்கும் வகையில், மூன்று விரல்களை உயர்த்திய நிலையில, ஒரு அழகிய பீடத்தில, ஒளிமிக்க கருங்கல்லில், நம் ஐய்யன் திருவள்ளுவரின் உயிரோட்டமுள்ள சிலை அமைக்கப்பட்டிருக்கின்றாது.

வேயா மாடத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 நீர்ப்பரப்புத் தொட்டிகளில, தேர்க்கோபுரம், தேர்க்கலசம், திருவள்ளுவரின் சிலை என மூன்று நிலைகளின் காட்சிகளும் பிரதிபலிக்கின்ற வகையில் அமைத்திருக்கின்றார்கள்.

வள்ளுவர்கோட்டத்தை நாம் நேரில் கண்டு உணரும் பொழுது தான், உண்மையிலேயே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு அற்புதமான இடம் என அறியலாம்.