பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
சுற்றுலா தளங்கள்
கிண்டி தேசியப் பூங்கா
இது நம்ம இந்தியாவில் இருக்கின்ற சிறிய பூங்காக்களில் எட்டாம் இடத்தில் இருக்கின்றது. அதிலும் ஒரு முக்கியமான செய்தி என்னவெனில், நகரத்தின் எல்லைப்பகுதிக்குள்ளாகவே அமைந்திருக்கின்ற பூங்காக்களில் நம் கிண்டி தேசியப் பூங்கா தான் முதல் இடம் வகிக்கிறது.

இப்பூங்கா 2.7 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தியாவில் இருக்கும் நான்கு மெட்ரோபாலிட்டன் நகரங்களில் ஒன்றான நம் சென்னையின் நகரத்திற்குள்ளே, இவ்வளவு பெரிய பூங்கா இருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமான ஒன்று.

பல சிறப்புகளை உள்ளடக்கியுள்ள இந்த கிண்டி தேசியப் பூங்கா எப்படி உருவாகியது என்று பார்த்தால், கில்பர்ட் ரோடிரிக்ஸ் (Gilbert Rodericks) என்னும் வெள்ளைக்காரர், தான் வேட்டையாடுவதற்காகவே இந்தப் பகுதியை பயன்படுத்தி வந்திருக்கிறார். 1958ம் ஆண்டு தான், நம் தமிழ்நாடு அரசின், வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த இடம் வந்திருக்கிறது. அதன்பிறகு தான் இந்த இடத்தை செப்பனிட்டு ஒரு முறைப்படுத்தப்பட்ட பூங்காவாக உருமாற்றியிருக்கிறார்கள்.

இந்த பூங்காவின் சிறப்புகள் என்று பார்த்தால், விலங்குகள் மட்டும் அல்லாமல், சிறப்புத் தாவரங்களும் அருமையாக பராமரிக்கப்பட்டு வருவது தான். உலர்ந்த அல்லது வறண்ட பசுமை காடுகள் மற்றும் புதர்காடுகள் வகைத் தாவரங்கள் இந்த பூங்காவுல வளர்க்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக சொல்வதென்றால், 350க்கும் மேற்பட்ட தாவரங்களின் சிற்றின வகைகளும், பல அரிய வகை மரங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல், விலங்குகள் என்று எடுத்துக் கொண்டால், புள்ளிமான், கலைமான், நரி, கீரி, குரங்குகள் உள்ளிட்ட 14 வகையான பாலூட்டிகள் இங்க செம்மையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. மேலும், 100க்கும் மேற்பட்ட பறவையினங்களும், இருவாழ்விகள் என்று சொல்லப்படுகின்ற பல்வேறு வகையான தவளைகளும், ஊர்வன இனத்தைச் சேர்ந்த விலங்குகளும் சிறப்பா பராமரிக்கப்பட்டு வருகின்றது.

இந்த பூங்காவிற்குள் நுழையும்போதே.. ஒரு பிரமாண்டமான டைனோசர் நம்மை மிரட்டலுடன் வரவேற்பதை தவறாமல் பாருங்கள்.

அடுத்ததாக நாம் பூங்காவிற்குள் நுழைந்ததுமே, நம் கண்களில் படுவது இந்த நூற்றுக்கணக்கான மான்கள் தான். இந்த மான்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக அங்கேயும், இங்கேயும் துள்ளி குதிப்பதைப் பார்த்தால் நம் மனக்கவலைகள் அனைத்தும் நொடிப்பொழுதில் ஓடிப்போய்விடும்.

மான்களுக்கு அடுத்து நிறைய வகையான குரங்குகள் நம்மளை வரவேற்பதைப் பார்க்கலாம். சிறுவர்களும், சிறுமிகளும் இதைப் பார்த்து மிகவும் ரசிப்பார்கள் என்பது உறுதி.

அடுத்ததாக நாம் பார்ப்பதற்காகவே நிறைய பறவைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.. பழுப்பு நிற கூழைக்கடா, செந்நிற கூழைக்கடா, மரங்கொத்தி, பஞ்சவர்ணக்கிளி என்று 130க்கும் மேற்பட்ட பலவிதமான பறவைகள் நம் கண்களை கவர்வது நிச்சயம்.

அடுத்து பறவைகளுக்கு முன்பாகவே பறக்கும் தன்மை பெற்ற 80க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் இந்த பூங்காவைச் சுற்றியும் பறந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் பல்வேறு வண்ண பட்டாம்பூச்சிகளும், தும்பிகளும் இடைவிடாமல் பறப்பதை நேரம் போவது தெரியாமல் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

அடுத்ததாக அமைந்திருப்பது முதலைப்பண்ணை. பல்வேறு வகையான முதலைகள், அளவிலும் உருவிலும் வேறுபாடுகளுடன் ஒரே இடத்தில் காணலாம்.

அடுத்திருப்பது ஆமைகள் வசிப்பிடம். இங்கு இந்திய நட்சத்திர ஆமைகள், கடல் ஆமைகள் என்று என பல வகை ஆமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

பூங்காவை சுற்றிப் பார்த்து, கால் வலிப்பவர்கள் மர நிழலில் அமைக்கப்பட்டிருக்கும் இருக்கைகளில் அமரலாம். அதுபோல் சிறுவர்கள் அங்கிருக்கும் விளையாட்டு உபகரணங்களில் ஆசை தீருமட்டும் விளையாடலாம்.

பூங்காவையும் சுற்றிப் பார்த்தாகிவிட்டது. சிறுவர்களும் விளையாடி களைத்துவிட்டார்களா. அடுத்து இருக்கவே இருக்கிறது பாம்புப் பண்ணை.. அதுவும் நம்ம கிண்டி சிறுவர் பூங்காவை ஒட்டியே இருக்கின்றது.

இந்த பாம்புப் பண்ணையில பல வகையான பாம்புகள பார்வைக்காக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பாம்பின் பெயர், அதன் குணாதிசயம் பத்தி தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாது பாம்பு எப்போது ஆக்ரோஷப்படும்:அப்ப அந்த பாம்புகள் செய்யும் எச்சரிக்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றிய விளக்க குறிப்பேடும் அங்கே இருக்கிறது..

இந்த பாம்புப் பண்ணையில இந்திய மலை பாம்புகள், தென் கிழக்கு ஆசிய மலை பாம்புகள், கட்டு விரியன், மரங்களில் வசிக்கும் பாம்புகள், கடல் பாம்புகள், தண்ணீர் பாம்புகள், மண்ணுளி பாம்புகள்னு 40க்கும் மேற்பட்ட பாம்புகள் கண்ணாடி கூண்டுகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றது.

இங்கு வருகின்ற பார்வையாளர்களுக்காக, காலை 11மணி, மதியம் 1மணி, மதியம் 3மணி, சாயங்காலம் 4.30மணின்னு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பாம்பில் இருந்து விஷம் எடுப்பது எப்படி என நேரிடையாக செய்து காண்பிக்கப்படுகின்றது.

இந்த பூங்காவை பொதுமக்கள் பார்வையிட காலை 9 மணியிலருந்து சாயங்காலம் 5.30 மணி வரை அனுமதி உண்டு. அதற்கு நுழைவு கட்டணமாக சிறுவர்களுக்கு 5 ரூபாயும், பெரியவர்களுக்கு 15 ரூபாயும் தற்போது கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதேபோல் பாம்பு பண்ணையை சுற்றிப் பார்க்க தனி கட்டணம் உண்டு.. இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி பூங்காவிற்கு செவ்வாய்க்கிழமை வார விடுமுறை.