பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
சாதனை மனிதர்கள்
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) ஒரு கோட்பாட்டு, அண்டவியல் ஆய்வாளர் ஆவார். 1942ஆம் ஆண்டு, ஜனவரி 8ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் இவர் பிறந்தார்.

கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராக பணியாற்றினார்.

ஸ்டீபன் ஹாக்கிங் தனது 21 வயதில், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பொழுது, குணப்படுத்த முடியாத 'Anterior horn cell disease' என்ற நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

சாதாரணமாக, நம் மூளையிலிருந்து மூன்று வரிசைகளாக (order) நரம்புகள் வெளியே செல்லும். மூளையிலிருந்து நேரடியாக முதுகெலும்புக்குச் செல்வது முதல் வரிசை.

அடுத்ததாக, முதுகெலும்பிலிருக்கும், Anterior horn cell என்ற இடத்திலிருந்து கை, கால்களுக்குச் செல்லும் நரம்புகள் இரண்டாவது வரிசை.

இதில் Anterior horn cell பாதிக்கப்பட்டால், நம் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் தடைபடும். உதாரணமாக, கை, கால் நரம்புகள் செயலிழந்து போகும். உடலை அசைக்க முடியாது. பேச்சு வராது. எதையும் விழுங்குவதற்குச் சிரமமாக இருக்கும். மூளை, கையைத் தூக்க வேண்டும் என்று நினைத்தாலும் கை, கால்களை அசைக்க முடியாது. எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பது இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இது, `புரொக்ரஸ்ஸிவ் டிஜெனரேட்டிவ் டிசீஸ்’ (Progressive degenerative disease). செல்களை முழுமையாகச் சிதைத்துவிடும். ஒருமுறை இந்தப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், பின்னர் குணப்படுத்துவது என்பது இயலாத காரியம். இது 'Amyotrophic Lateral Sclerosis' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

ஸ்டீபன் ஹாக்கிங்கும் இந்தப் பாதிப்புக்குத்தான் ஆளாகியிருந்தார். இதனால் சுவாச மண்டலமும் பாதிப்படையும். ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு இரண்டு முறை ட்ரக்கியோஸ்டமி (Tracheotomy) செய்யப்பட்டிருக்கிறது. தன் 40-வது வயதில் முழுமையாகப் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங், ஐம்பது வயதில் வீல்சேரில் அமரும் சூழலுக்குத் தள்ளப்பட்டார்.

ஸ்டீபன் ஹாக்கிங்கினால் வாயால் பேச முடியாவிட்டாலும், சைகையின் மூலமாகப் பேச முயற்சி செய்தார். கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பில் இருந்தார்.

கம்ப்யூட்டர் துறையும் அப்போதுதான் வளர்ச்சியடையத் தொடங்கியிருந்தது. இது ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு மிக சாதகமாக அமைந்துபோனது. விரல் அசைவின் மூலமாக தட்டச்சு செய்து, அதை கம்ப்யூட்டரைப் பேசவைத்து மற்றவருடன் கம்யூனிகேஷன் வைத்துக்கொண்டால்? அதற்கும் வழி பிறந்தது. ஸ்டீபன் ஹாக்கிங்கின் நண்பர் ஒருவர் இதற்காகவே, இவருக்காகவே பிரத்யேகமான சாஃப்ட்வேர் ஒன்றை உருவாக்கினார். அதன் உதவியோடு பிறரிடம் பேசிவந்தார் ஸ்டீபன். அவரால் பிறர் பேசுவதைக் கேட்க முடியும் என்பதால் இந்த கம்ப்யூட்டர்வழி தகவல் பரிமாறும் வசதி எளிதாக இருந்தது.

கல்லூரி காலத்தில் தன்னுடன் படித்த தோழி, ஜேன் வைல்டை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். 30 வருடங்கள் இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். பின்னர், தன்னை கவனித்துக்கொண்ட செவிலியர் எலைனுடன் காதல்கொண்டு, அவரைத் திருமணம் செய்துகொண்டு, பத்தாண்டுகள் அவரோடு வாழ்ந்தார். உடல் இச்சைகள் கடந்த அழகான காதலாக அந்தக் காதல் இருந்தது.

1986-ல் அமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என அறிவித்தது.

ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார்.

இவர் எழுதிய அறிவியல் நூல்களான, A Brief History of Time (நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு), The Universe in a Nutshell ஆகிய இரண்டும், சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்டதால், பலரையும் கவர்ந்து விற்பனையிலும் சாதனை படைத்தன.

அண்டவியலும் (cosmology), குவாண்ட்டம் ஈர்ப்பும் (quantum gravity) இவருடைய முக்கியமான ஆய்வுத்துறைகள் ஆகும். கருந்துளைகளுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகள் பற்றிய கட்டுரைகள் ஆராய்ச்சித் துறைக்கான இவரது முக்கியமான பங்களிப்பாகும்.

கருந்துளையினுள் ஒளியுட்பட எதுவுமே வெளியேறமுடியாது என்று நம்பப்பட்டதற்கு மாறாகக் கருந்துளையினுள் துணிக்கைகள் (Particles) வெளியேறுகின்றன, அதன்மூலம் காலப்போக்கில் இல்லாமல் போய்விடுகின்றன. இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று அவருடைய பெயரினால் அழைக்கப் படுகிறது.

``உலகில் அனைவருக்கும் இலவச மருத்துவம் கிடைக்க வேண்டும். தன் நாடான இங்கிலாந்திலிருப்பதுபோல் (NHS - National Health Service) இலவச மருத்துவ சிகிச்சை உலகிலிருக்கும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் .. என் நாட்டில், எனக்கு இலவச மருத்துவ வசதி கிடைத்ததால்தான் என்னால் சாதிக்க முடிந்தது." - உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங் உதிர்த்த வார்த்தைகள் இவை.

கடந்த 2014-ம் ஆண்டு பிபிசி-க்கு அளித்த பேட்டியின் போது, ‘‘செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சிந்திக்கும் ரோபோக்களை உருவாக்கினால் மனித குலத்துக்கு பேரழிவாக அமையும்’’ என்று ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்தால் 2,600-ம் ஆண்டுக்குள் பூமி பெரும் நெருப்பு கோளமாக மாறிவிடும். அப்போது மனித இனம் இல்லாமல் போகும் என்று எச்சரித்துள்ளார். பருவநிலை மாற்றம், விண்கற்களின் தாக்குதல், மக்கள் தொகை பெருக்கத்தால் அடுத்த 100 ஆண்டுகளில் மக்கள் வேற்று கிரகங்களில் குடியேறும் நிலை உருவாகும் என்று ஹாக்கிங் நம்பினார்.

மேலும் மனிதர்களின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை, தொழில்நுட்பங்களில் பெரும் வளர்ச்சி ஆகியவை அணுஆயுத, ரசாயன போர்களுக்கு வழிவகுத்து நம்மை முற்றிலும் அழித்துவிடும். இந்த அசம்பாவிதத்தை தடுக்க வேண்டிய பொறுப்பு உலக நாடுகளின் அரசுகளுக்கு உள்ளது என்று வலியுறுத்தினார்.

பூமியில் மனிதர்கள் வாழ்வதை, தங்களது இருப்பை வேற்றுகிரகவாசிகளுக்குத் தெரியப்படுத்தும் முயற்சிகளுக்கு ஹாக்கிங் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். ஏனெனில், நம்மை விட வேற்றுகிரகவாசிகள் தொழில்நுட்பத்தில் அதிக முன்னேற்றம் அடைந்தவர்கள் என்று அவர் நம்பினார்.

தன் இறுதி ஆண்டுகளில், பேச நினைப்பதை முகம் மற்றும் தாடை அசைவின் மூலமாக மொழிபெயர்ப்பு செய்யும் இயந்திரத்தின் உதவியோடு பேசினார்.

ஸ்டீபன் ஹோக்கிங் 14 மார்ச்சு 2018 அன்று அவரது 76ம் வயதில் கேம்பிரிட்ஜில் உள்ள அவரது வீட்டில் காலமானார். ஹாக்கிங், கலிலீயோ இறந்த நாளில் பிறந்து, ஐன்ஸ்டீன் பிறந்த நாளில் மறைந்தார் என்பது ஒரு நினைவு கூறத் தக்க நிகழ்வாகும்.