பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
செய்திகள் - 2018
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்
கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் சார்பில், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஆனதால், 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்தும், அரசு உரிய முடிவினை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியது.

இதனைத்தொடர்ந்து 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழக அரசின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்தது.

இதற்கிடையே, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

அதுபோல், நளினியும், தன்னை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி, தமிழக அரசின் மறுஆய்வு மனு மீதான விசாரணையில், 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக, 3 மாதங்களுக்குள் மத்திய அரசு கருத்து தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, 7 பேரின் ஆரோக்கியம், மனநிலை, சமூக பின்னணி, குடும்பச் சூழல், பொருளாதார பின்னணி, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.

மத்திய அரசின் கடிதத்துக்கு, தமிழக அரசு உரிய பதிலை அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு வந்தது. அப்போது 7 பேரையும், முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது; இதற்கு, தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.