பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
மருத்துவம்
தக்காளியின் மகத்துவம்
தக்காளி நிழல்சேர் குடும்ப வகையைச் சேர்ந்தது.

தக்காளிக்கு ஆங்கிலத்தில் Tomato என்று பெயர். தக்காளியின் தாவரவியல் பெயர் Solanum lycopersicum.

தக்காளியின் பிறப்பிடம் அமெரிக்க கண்டம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்… அந்தக் கண்டத்தில் 16-ம் நூற்றாண்டில் உணவுக்காக தக்காளி பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷயம் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது. அதே நூற்றாண்டில் மெள்ள நகர்ந்து ஸ்பெயின், ஆப்பிரிக்கா, ஆசியா என்று ஊடுருவியிருக்கிறது தக்காளி.

தக்காளி உற்பத்தியில் இப்போதும் முதலிடம் வகிப்பது அதன் பிறப்பிடமான அமெரிக்கா தான்… நம் இந்தியாவில் ஆந்திர பிரதேசம், பீகார், கர்நாடகா, ஒரிசா போன்ற மாநிலங்களில் தக்காளி அதிகமாக பயிரிடப்படுகிறது.

சரி. 100 கிராம் தக்காளியில என்னென்ன சத்துக்கள் இருக்குன்னு பார்ப்போமா.

வைட்டமின். A, B, C மூன்றுமே அடங்கியிருக்கிறது. அதிலும்
வைட்டமின் C 13.7 மி.கி.
கார்போஹைட்ரேட் 3.89கிராம்
புரதச்சத்து 0.88கிராம்
கொழுப்புச்சத்து 0.2கிராம்
இரும்புச்சத்து 11.6 மி.கி இருக்கிறது.

தாதுப்பொருள் என்று பார்த்தால்.
பொட்டாஷியம் 237மி.கிராம்
பாஸ்பரஸ் 24 மி.கிராம்
மெக்னீஷியம் 10மி.கிராம்
சோடியம் 5மி.கிராம்
இரும்புச்சத்து 0.27மி.கிராம் இருக்கிறது.

சரி. இப்போது இந்த தக்காளியில என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளதென்று பார்ப்போம்…

தக்காளியை தினமும் உணவில் சேர்த்து வருவதினால், நமது உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்… எப்படி என்று பார்த்தால் தக்காளியில தான் வைட்டமின் சி அதிகமா இருக்கின்றதே.

தக்காளி ஒரு சிறந்த ஆன்டி-செப்டிக் மருந்து என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாம்.. நமது கைகளிலயோ.. உடம்பிலோ ஏதேனும் வெட்டு காயம் ஏற்பட்டது எனில், வெட்டுப்பட்ட இடத்தில் பச்சை தக்காளியை இரண்டா வெட்டி தடவினாலே போதும். அதன்பிறகு எந்த வித செப்டிக்கும் ஏற்படாது.

சரும நோய் பிரச்சினை உள்ளவர்கள் வெயிலில் அலைந்து விட்டு, வீட்டுக்கு திரும்பியதும், தக்காளியை உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டு, சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவுவதினால் வெயிலினால் ஏற்படுகின்ற சரும பிரச்சினை சிறிதும் இருக்காது.

உணவில் தக்காளியை தவறாமல் சேர்த்துக்கொண்டு வருபவர்களுக்கு செரிமானத் தொல்லை என்பதே இருக்காது… ஏனெனில், தக்காளி நமது உடலுக்குள் எண்ணற்ற செரிமான நொதிகளை உற்பத்தி செய்து, நாம சாப்பிடுகின்ற உணவுகளை வெகு சீக்கிரம் செரிக்க வைக்கின்றது.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தக்காளியை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால், அவர்கள் தங்களின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்… ஏனெனில், தக்காளியில் சோடியம் குறைவாக இருப்பதினால், அது இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவி புரிகின்றது.

பசியின்மையால அவதிப்பவர்களுக்கு தக்காளி ஜூஸ் மிகவும் நல்லது… எப்படியெனில், தக்காளி ஜூஸ் பசியை தூண்டும் நொதிகளை உற்பத்தி செய்கின்றது… அதைவிடவும், தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிடுவது இன்னும் நல்லது.

அதேபோல், தினமும் ஒரு பச்சை தக்காளியை சாப்பிட்டுட்டு வருபவர்களுக்கு பார்வைக் கோளாறு வருவது குறைகின்றது என்று ஆராய்ச்சியில் தெரிய வந்திருக்கின்றது… தக்காளியில் இருக்கும் பீட்டா-கரோட்டின் கண்பார்வை கோளாறு ஏற்படுவதை தடுக்கின்றதாம்.

இன்னுமொரு முக்கியச் செய்தி… தக்காளியில வைட்டமின் பி6 நிறைந்திருப்பதினால், அது இரத்த நாளங்களில ஏற்படும் பாதிப்புக்களை குறைத்து, பாதுகாக்கிறது. இன்னுமொரு அறிவிக்கப்படாத செய்தி ஒன்று உள்ளது… தக்காளியாலான மாத்திரை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்களாம்… அம்மாத்திரை இதய நோயாளிகளின் இதயத்தைப் பலப்படுத்துவதோடு, அவர்களின் ரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் கொழுப்புகளையும் கரைத்து, அவர்களின் ரத்த ஓட்டத்தையும் சீராகக்குகின்றதாம். பரிசோதனை அளவில இருக்கும் இம்மாத்திரை பயன்பாட்டுக்கு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் அல்லவா.

நீரிழிவு நோயாளிகளுக்கு தக்காளி மிகவும் நல்லது. தக்காளியில் உள்ள வைட்டமின் பி1, ரத்தத்துல சேருகின்ற சர்க்கரையை செயல்படும் சக்தியாக மாற்றிவிடுகிறது.

புகைப்பிடிக்கறவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. அவர்கள் தினமும் தக்காளி சூப் குடித்து வந்தால், தக்காளியில இருக்கின்ற குளோரோஜெனிக் மற்றும் கொமாரிக் ஆசிட், அவர்களின் உடம்பில் புற்றுநோயை உண்டாக்குகின்ற கார்சினோஜென்களை வெளியேற்றிவிடுகின்றது… அதற்காக இன்னும் அதிகமாக புகைபிடிக்காதீர்கள். கூடிய சீக்கிரம் அந்தப்பழக்கத்தை நிறுத்திவிடுங்கள்.

அதேபோல் ரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கும் தக்காளி ஒரு கண்கண்ட மருந்து. இரத்த சோகையை குணமாக்கும் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து இரண்டும் உள்ள தக்காளியை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தாலே போதும். அவர்களுடைய இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகையை தக்காளி குறைத்துவிடும்.

பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் தக்காளியில் நிறைந்திருப்பதினால் தக்காளியை ஒதுக்காமல் சாப்பிடுபவர்களின் எலும்புகளும், பற்களும் உறுதியாக இருக்கும்.

தக்காளி ஒரு சிறந்த இயற்கை வலி நிவாரணி. தக்காளியில நோயெதிர்ப்பு அழற்சி தன்மை இருப்பதினால், ரொம்ப நாள்பட்ட வலி இருப்பவர்கள் அதாவது ஆர்த்ரிடிஸ் பிரச்சினை உள்ளவர்கள் தினமும் சாப்பாட்டுல தக்காளியை பயன்படுத்திவந்தாலே போதும். அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் தக்காளி சூப் குடித்து வந்தாலே போதும்… தக்காளியில் கலோரிகள் இல்லாததுனால எடையைக் குறைக்க அதிக உதவி செய்கின்றது.

வயதாகியும் இளமையாக காட்சியளிக்க விரும்புபவர்களுக்கு தக்காளி ஒரு சிறந்த வரப்பிரசாதம். தினமும் உணவில் தக்காளியை சேர்ப்பதோடு, தக்காளி சாற்றை உடம்பில் தேய்த்து குளித்து வந்தால். இளமையாகவே காட்சியளிப்பார்கள்.

இவ்வளவு நலனை அள்ளித்தரும் தக்காளியைப் பற்றி ஒரு சுவையான விவாதமும் நடைபெற்று வருகின்றது. அது 'தக்காளி’ பழ வகையை சேர்ந்ததா. காய்கறி வகையைச் சேர்ந்ததா?' என்பதே. இந்த சந்தேகம் மக்கள் மனதில் காலகாலமாக நீடிக்கிறது… ஆக்ஸ்போர்டு டிக்க்ஷனரி வலைதளத்தில் அதிகமான மக்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியும் இதுதான்.

ஆனால், இந்த சிக்கலான கேள்விக்கு, வித்தியாசமான ஒரு பதிலைக் கொடுத்து அசத்துகிறார்கள் விஞ்ஞானிகள். அது என்னவென்றால் 'விஞ்ஞானப்பூர்வமாக இது பழவகையை சார்ந்தது தான்;ஆனால், உணவுப்பூர்வமாக காய்கறி வகையைச் சேர்ந்தது' என்று.