பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
மருத்துவம்
வெற்றிலை உடலுக்கு நல்லதா? கெட்டதா?
வெற்றிலை கொடி வகையை சேர்ந்த தாவரம். இதனை ஆங்கிலத்தில் பைப்பர் பேட்டில் ( Piper betle)என அழைப்பார்கள். வெற்றிலை ஒரு மருத்துவ குணம் கொண்ட மூலிகையாகும். மலேசியாவில் தோன்றிய வெற்றிலையானது , தற்போது இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றது.

தமிழ்நாட்டில் கும்பகோணத்திலும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள அய்யம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை, சுவாமிமலை, ஆவூர், திருவையாறு , மற்றும் தேனி மாவட்டத்தில் சின்னமனூர் மற்றும் கூடலூர், நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலுர் மற்றும் பொத்தனுர், கருர் மாவட்டம் புகழுர், திருச்சி மாவட்டம் தொட்டியம், மதுரை அருகே சோழவந்தான் ஆகிய ஊர்களில் பெருவாரியாக வெற்றிலை பயிரிடப்படுகிறது.

வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள். வெற்றிலை பயிராகும் நிலப்பகுதிக்கு வெற்றிலை கொடிக்கால் என்கிறார்கள். மிதமான தட்பவெப்பம், மண்வளம், தண்ணீர்வசதி உள்ள பகுதிகளில் வெற்றிலை பயிராகும். கருகருவென கரும்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகள் ஆண்வெற்றிலைகள் என்றும், இளம்பச்சை வெற்றிலைகள் பெண்வெற்றிலைகள் என்றும் வகைப்படுத்தப்படுகின்றன. வெற்றிலையில், கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகைகள் இருக்கின்றன. வெற்றிலை தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் போன்ற பல பெயர்களில் தமிழில் அழைக்கப் படுகின்றது. தமிழர்கள் வெற்றிலையை எல்லா மங்கள காரியங்களுக்கும் பயன்படுத்துகிறார்கள்.

மருத்துவ குணங்கள் வெற்றிலைக்கு நிறைய உண்டு. உணவு செரிக்க, ரணங்கள் தீர பயன்படுத்துகிறார்கள். வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவ பலன்களை தரக்கூடியவை. இதில், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளன. வீரியம்மிக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பினைல்புரோபின் (Phenylpropene) பொருள் உள்ளது. இது, உடலுக்கு சூட்டை தரக்கூடியது.

வெற்றிலையின் மருத்துவ பயன்கள் பின் வருமாறு...

வெற்றிலைச்சாறு 15 மி.லி எடுத்து அதனுடன் வெந்நீர் கலந்து குடித்து வந்தால், வயிற்று உப்புசம், மந்தம், தலைவலி, நீரேற்றம், வயிற்றுவலி போன்றவற்றை குணமாக்கும்.

வெற்றிலை, உமிழ்நீரை பெருக்கும், பசியை உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டும். வாய் துர்நாற்றத்தை நீக்கும்.

வெற்றிலையை இடித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்கும்.

வெற்றிலைச் சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்.

கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி, ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும்.

வெற்றிலைச் சாற்றுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல் போன்றவை குணமாகும்.

வெற்றிலையை தீயில் வாட்டி, அதனுள் ஐந்து துளசி இலைகளை வைத்து, கசக்கி பிழிந்து சாறு எடுத்து, 10 மாத குழந்தைக்கு காலையும் மாலையும் 10 சொட்டு வீதம் கொடுத்து வந்தால் சளி, இருமல் குணமாகும்.

வெறும் வெற்றிலை இலையை தீயில் வாட்டி, மார்பில் பற்றுப் போட்டுவந்தால் சளி குறையும்.

விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாத கோளாறுகளுக்கு இதன் இலையை அரைத்து கட்டிவந்தால் நல்ல பலன் கிட்டும்.

வெற்றிலையில் ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, கட்டிகளின் மேல் வைத்து இரவில் கட்டினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியாகும்.

கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வந்தால், இரைப்பை குடல்வலி, அசிடிட்டி, செரிமானம், மலச்சிக்கல் போன்றவை குணமாவதோடு உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமடையும்.

குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாக சுரக்கவும், மார்பில் பால் கட்டுவதால் வரக்கூடிய வீக்கத்தை கரைக்கவும் வெறும் இலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்டினால் பலன் கிட்டும்.

தேள் கடி விஷத்தை முறிக்க இரண்டு வெற்றிலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த்துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிட்டால், நல்ல பலன் கிடைக்கும். விஷப்பூச்சிகள் கடித்தாலும் இதே போல் செய்ய பலன் கிடைக்கும்.

படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வந்தால் ஞாபக சக்தியை அதிகமாகும்.

வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால், காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகும்.

இப்படி பல்வேறு வகையில் நம் உடல் சார்ந்த பிரச்னைகளை தீர்க்கவல்ல இந்த வெற்றிலையை நாமும் உட்கொண்டு நல்ல பலன் பெறலாம்.