பல்சுவை இணைய இதழ்
    


புதிய வெளியீடு
சமையலோ சமையல்
மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 2 கப்
ஆட்டுக் கறி - அரை கிலோ
வெங்காயம் - 3
தக்காளி - 1
இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - சிறிதளவு
தயிர் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

பிரியாணி மசாலா செய்ய:
காய்ந்த மிளகாய் - 10
தனியா - 2 டீஸ்பூன்
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 4
கிராம்பு - 2
ஜாதி பத்திரி - 2
அன்னாசிப் பூ - 2
சீரகம், சோம்பு - அரை டீஸ்பூன்
தாளிக்க
பட்டை, பிரியாணி இலை, புதினா, மல்லித்தழை - சிறிதளவு நெய் - 3 குழிக்கரண்டி

செய்முறை

பாசுமதி அரிசியைக் கழுவி பத்து நிமிடம் ஊறவையுங்கள்.

ஆட்டுக்கறியைச் சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து கழுவி, கறியோடு தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் போட்டு உப்பு, மஞ்சள் தூள், அரை டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து, நான்கு விசில் விட்டு இறக்கிவையுங்கள்.

பிரியாணி மசாலாவுக்குக் கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆறியதும் பொடித்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் நெய் விட்டு பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்துத் தாளியுங்கள். வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்கி அதனோடு மீதமுள்ள இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள்.

பிறகு பச்சை மிளகாய், தக்காளி, புதினா, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்குங்கள்.

பின்னர் அரைத்து வைத்துள்ள பிரயாணி மசாலா, தயிர், வேகவைத்த கறியைச் சேர்த்து, நன்றாக வாசனை வரும்வரை வதக்குங்கள்.

அதில் அரிசியைப் போட்டு ஒரு கிளறு கிளறி மூன்றே முக்கால் கப் தண்ணீர் விட்டு, உப்பு சரிபாருங்கள்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் குக்கரை மூடிவைத்து, ஒரு விசில் வந்ததும் பதினைந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்கிவையுங்கள்.

சுடச் சுட பரிமாறினால் மதிய விருந்து களைகட்டும்.